Monday, July 25, 2022

சமூக அடுக்கமைவில் பொருளாதாரத்தின் தாக்கம்

சமூகவியல் என்பது தனிமனிதன், மனித குழுக்கள், சமூக நிறுவனங்கள் என்பனவற்றை ஆய்விற்குட்படுத்தும் ஒரு கற்கைநெறியாக காணப்படுகின்றது. இக் கற்கை சமூக நிறுவனங்களின் கட்டடைப்பு, சமூகத்தில் ஏற்படும் மாற்றம், பிரச்சினை என்பனவற்றை அறிவியல் ரீதியில் கற்கின்றது. அவ்வகையில் சமூக அடுக்கமைவு என்பதும் சமூகவியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. சமூகவியலில் சமூக அடுக்கமைவு எனும் பதம் சமூக நிலைப்பாட்டின் அமைப்பை வரையறுக்கப்பயன்படுத்தப்படுகின்றது. அதாவது சமூக அடுக்கமைவு என்பது செல்வம், வருமானம், கல்வி, குடும்ப பின்னனி மற்றும் அதிகாரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களை தரவரிசையாக வகைப்படுத்துவதை குறிக்கின்றது.

இச் சமூக அடுக்கமைவில் பல காரணிகளின் தாக்கம் காணப்படுகின்றது. அவை இனம், தொழில், கல்வி, மொழி, பால்நிலை, அதிகாரம் போன்றனவாகும். இக் காரணங்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார ரீதியிலேயே காணப்படுகின்றது. அதிலும் செல்வம், வருமானம், தொழில் போன்ற பொருளாதார ரீதியான காரணங்களின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. சமூகத்தில் அடுக்கமைவு ஏற்படுவதற்கு பொருளாதாரம் பிரதான பங்கினை கொண்டுள்ளது. 

மனிதன் ஆதியில் எதுவும் இல்லாதவனாக இருந்து எழிமையான வாழ்வை மேற்கொண்டான் பின் மனிதர்களிடையே தேவைகள் அதிகரித்தன இதன் வழி சொத்துக்களை சேகரிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இது சமூக அடுக்கமைவிற்கு காரணமாக அமைந்தது. பொருளாதாரத்திலும் செல்வத்திலும் அடிப்படையானது உற்பத்திக் காரணிகள் உற்பத்தி ஒன்றை மேற்கொள்ள தேவையான நிலம், மூலதனம், முயற்சி மற்றும் உழைப்பு என்பனவே உற்பத்தி காரணிகளாகும். இக் காரணிகளின் சமமற்ற தன்மை சமூகத்தில் அடுக்கமைவினை ஏற்படுத்துகின்றது. உற்பத்தி காரணிகளில் முலதனம், நிலம், முயற்சி என்பனவற்றை கொண்டிருக்கும் முதலாளி சமூக அடுக்கமைவில் உயர் வர்க்கமாக கருதப்படும் அதேவேளை உழைப்பை மட்டும் கொண்டிருக்கும் தொழிலாளி சமூக அடுக்கமைவில் தாழ் நிலையிலே காணப்படுகின்றான். 

இதே போல வருமானம் எனும் பொருளாதார காரணியும் சமூகத்தில் அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. தற்கால நடைமுறையில் தொழிலாளிகள் எனும் வர்கத்தில் அதிக வருமானத்தை பெறுபவர் குறைந்த வருமானத்தை பெறுபவர் என்ற அடுக்கமைவு தோன்றி இருப்பதை அவதானிக்கலாம். ஒரு நிறுவனத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களிடையே அதிக வருமானத்தையும் ஊக்குவிப்பு தொகைகளையும் பெறுபவர்கள் உயர்நிலையில் வைத்து நோக்கப்படுகின்றனர். அதேவேளை குறைவான வருமானம் பெறுபவர்கள் தாழ்நிலையில் நோக்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் முகாமையாளரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளியும் ஓரே மட்டத்தில் வைத்து பார்க்கப்படுவதில்லை இவர்களிடையே உயர்வு தாழ்வு ஏற்படுதற்கு அவர்கள் பெறும் வருமானமும் ஒரு காரணமாகவே அமைகின்றது.

பொருளாதாரத்தில் போட்டி என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. தொழில் ரீதியான போட்டி சந்தை ரீதியான போட்டி என பொருளாதாரம் இப் போட்டிகளின் அடிப்படையிலேயே வளர்ச்சி பெறுகின்றது. இதே போட்டி நிலையின் மூலம் சமூக அடுக்கமைவும் வளர்ச்சி பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. தொழில் ரீதியில் நல்ல வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். நல்ல வருமானம், கொளரவம் மிக்க தொழிலை பெற வேண்டும் என்று தொழில் ரீதியில் போட்டி ஏற்படுகின்றது. இது மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டிற்கு தற்காலத்தில் அரச தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதில் உள்ள போட்டியை குறிப்பிடலாம். இப் போட்டியில் சிலர் அரச தொழிலை பெற்றுக் கொள்கின்றனர் சிலர் அரச தொழிலை பெற தவறுகின்றனர். ஆனால் சமூகத்தில் அரச தொழில் புரியும் நபர்களுக்கே அதிக மரியாதையும் கௌரவமும் கிடைப்பதை காணலாம். இவ்வாறு தொழில் ரீதியான போட்டி சமூக அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது.

இதேபோல் சந்தை வாய்ப்பு அல்லது சந்தைக்கான போட்டியும் அடுக்கமைவை ஏறபடுத்துகின்றது. அதிக சந்தை வாய்பை பெற்றுக் கொள்ளும் பல் தேசிய உற்பத்தி நிறுவனங்களுக்கும். குறைவான சந்தை வாய்பை பெற்றுக்கொள்ளும் உள்நாட்டு நிறுசனங்களிடையே காணப்படும் வேறுபாடு இவ் அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டிற்கு பெப்சி குளிர்பானம் விற்கும் கடையின் உரிமையாளருக்கும் ஒரு இளநீர் விற்கும் தெருவோர கடை உரிமையாளருக்கும் இடையிலான வேறுபாட்டினை கூறலாம். இங்கு இருவரும் குளிர்பானங்களையே விற்பனை செய்கின்றனர் எனினும் சமூகத்தில் இவர்களிடையே வேறுபாடு இருப்பதை காணலாம். பெப்சி அதிக சந்தை வாய்பை கொண்டுள்ளது சர்வதேச ரீதியில் விற்பனையாகின்றது, அதற்கு அதிக விளப்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் அதனை அருந்துவது அதிகமாகின்றது. இதை விற்பருக்கு இலாபம் ஏற்படுகின்றது. இதே நிலை இளநீர் விற்கும் வியாபாரிக்கு ஏற்படுவதில்லை. அதை போலவே ஒரு பெரிய கடையில் ஆடைகளை காட்சிப்படுத்தி விற்பவரையும், வீடு வீடா கூவி ஆடைகளை விற்பவரையும் சமூகம் ஓரே பார்வையில் பார்பதில்லை. இங்கு உயர்வு தாழ்வு என்ற அடுக்கமைவு ஏற்பட சந்தை வாய்பு ஒரு காரணமாக அமைகின்றது.

அடுத்து உலகலாவிய ரீதியில் அடுக்கமைவு ஏற்பட வளப்பகிர்வு எனும் பொருளாதார அம்சம் காரணமாக அமைகின்றது. பொருளதார ரீதியில் நாடுகளுக்கு நாடு வளப்பகிர்வும் அதனை வினைத்திறனாக பயன்னடுத்தும் தன்மையும் மாறுபடுகின்றது. இது அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. வளங்களை வினைத்திறனாக பயன்னடுத்தும் மக்கள் வாழும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடாக கருதப்படும் அதேவேளை வளத்தினை அதிகம் கொண்டிராத அதனை வினைத்திறனாக பயன்படுத்த முடியாத நாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு சமூக அடுக்கமைவு ஏற்படுத்துவதில் அதிகமான பொருளாதாரம் செல்வாக்கு செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.


Sunday, July 24, 2022

விமர்சனவியல் கோட்பாடு லூக்காச் பங்களிப்பு

ஃப்ராஙஃபர்ட் சிந்தனையாளர்களில் விமர்சனவியல் கோட்பாட்டு வளர்ச்சியில் லூகாச்சின் பங்களிப்பு

விமர்சனவியல் கோட்பாடு என்பது சமூக தத்துவம்சார் அனுகுமுறையாக அமைகின்றது. இவ் கோட்பாடு சமூக மற்றும் கலாசார கட்டமைப்புகளை பிரதிபலிப்பதாகவும் அவற்றை விமர்சனத்திற்க்கு உட்படுத்துபவையாகவும் அமைகின்றன. மேலும் இவ் கோட்பாடு சமூகத்தின் அதிகார கட்டமைப்புகளை கேள்வி கேக்கும் விதத்திலும் அவற்றை விமர்சிக்கும் விதத்திலும் காணப்படுகின்றது. இவ்வாறு சமூக, கலாசார, அதிகார கட்டமைப்புகளை விமர்ச்pப்பதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தவும், புதைந்து கிடக்கும் மறைக்கப்பட்டிருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வரவும் இவ் கோட்பாடு முயற்ச்சிக்கின்றது.

இவ் விமர்சனக் கோட்பாடு மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு ஃப்ராஙஃபர்ட் பள்ளி சிந்தனையாளர்களினால் வளர்க்கப்பட்டதோன்றாகும். இவ் கோட்பாட்டின் முதன்மையான குறிக்கோள்களாக மக்களை ஆதிக்கத்திற்க்கும் அடிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தும் சமூக கட்டமைப்புகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் அவ் கட்டமைப்பை கட்ந்து செல்ல மக்களுக்கு உதவி செய்தல் என்பன அமைகின்றன. ஃப்ராங்ஃபர்ட் சிந்தனையாளர்களான Herbert Marcuse, Theodor Adorno, Walter Benjamin, Max Horkheimer, George Lukas, Jurgen Habermas போன்றவர்கள் இவ் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர்களாக அமைகின்றனர்.

இவ் சிந்தனையாளர்கள் அறிவின் மற்றைய வடிவங்கள் போல அறிவும் ஆதிக்க மற்றும் அடக்குமுறைகளுக்கான கருவியாக பயன்படுத்தபடுகின்றது என்றும் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியின் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருப்பதையும் விமர்சிக்கின்றனர். அறிவு என்பது மக்களின் விடுதலைக்கு பயன்படுத்துவதற்க்கு பதிலாக அவர்களின் முடிவுக்கு பயன்படுத்தப்படுகின்றது என இவ் அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் ஃப்ராஙஃபர்ட் சிந்தனையாளர்களுள் George Lukas எனும் அறிஞரின் பங்களிப்பு முதன்மையானவொன்றாக அமைகின்றது.

George Lukas 1885 இல் ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். மாக்ஸியத்தின் மீது இவர் கொண்ட ஆர்வத்தின் அடிப்படையில் விமர்சனவியல் மற்றும் மேற்கத்தேய மார்க்ஸியம் (Western Marxism) என்பனவற்றின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். லூக்காஸிற்க்கு மார்க்ஸியம் சார்ந்த ஆர்வம் தோன்றுவதற்க்கு முன் இவர் கருத்துமுதல்வாத சிந்தனையாளர்களின் தாக்கத்திற்க்கு உட்பட்டிருந்தார். இவ் கருத்துமுதல்வாதிகள் முதலாளித்துவத்தினையும், அறிவொளி மரபு உருவாக்கியிருந்த விஞ்ஞான தொழில்நுட்பம் என்பனவற்றை விமர்சித்து மனித அகச்சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அழித்தனர். இத்தகைய விமர்சன தன்மையினை லூக்காச்சின் ஆக்கங்களிலும் காணலாம். 

முதலாம் உலகப்போரின் இறுதி ஆண்டுகளில் (1916) லூக்காச்சினால் எழுதப்பட்ட The Theory of the novel” எனும் நூல் ஹெகல் எனும் கருத்துமுதல்வாத சிந்தனையாளரின் சிந்தனைக்கு உட்பட்டிருந்தது. லூக்காஸ் இவ் நூலின்னூடாக உலகின் அரத்தமற்ற தன்மையினை விமர்சித்தார். இவ் சமூக உலகம் அதன் அர்த்தம்மற்ற மரபுகளின் அடிப்படையில் தம் உறுப்பினர்களான மக்களை இரண்டாம் நிலைப்பட்டவர்களாக கருதுகின்றது. இதன் விளைவாக தம் வீடாக இருக்க வேண்டிய உலகில் வீடற்றவர்களாக மக்கள் மாற்றப்படுகின்றனர் என தன் விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறு கருத்துமுதல்வாத சிந்தiiயின் தாக்கங்களின் ஊடாக லூக்காச் அந்நியமயமாதல் பற்றிய தம் விமர்சனபார்வையை முன்வைத்தார். மனிதனின் படைப்பு செயலால் உருவாகின்றவை எவ்வாறு அவனுக்கே எதிரான பகைசத்திகளாக மாறுகின்றன, மனித உறவுகள் எவ்வாறு பொருட்களுக்கிடையிலான உறவுகளாக மாற்றம் பெறுகின்றன என்றும் பல விமர்சனங்களை இவர் முன்வைத்தார்

லூக்காச்ன் விமர்சனவியல் கோட்பாட்டிற்க்கான பங்களிப்பில் அடுத்ததாக வரலாறும் வர்க்க உணர்வும் என்ற ஆக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சிகளாக பிரிந்து இருந்த nஐர்மணிய இடதுசாரி அறிஞர்கள் கட்சிக்கும் தமக்கும் இடையில் உள்ள உறவினை பெரிதாக நினைத்து கொண்டிருந்த வேளை அவர்களை மாக்சிய கோட்பாடு சார்ந்து சிந்திக்க வைத்தது இவ் நூலாகும் இவ் நூலின் அடிப்படையிலேயே கட்சியை தாண்டி கோட்பாடுகள் ரீதியாக சிந்திக்கும் அறிஞர்கள் உருவாகினர். இதன் படியே ஃபராங்ஃபர்ட் சிந்தனைப் பள்ளியின் தோற்றமும் விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சியும் ஏற்ப்பட்டது. 

மெக்ஸ் வெபரின் சிந்தனைகளுக்கு உட்படிருந்த லூக்காச் வெபரின் கருத்துகளுக்கு அமைவாக இவ் ஆக்கத்தை முன்வைத்தார். மானிட வாழ்வின் எல்லா அம்சங்களுமே கணக்கீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன, கணக்கீட்டற்க்கு உட்படாதவை நிராகரிக்கப்படுகின்றன, முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் நவீன தொழிற்சாலைகளுக்கு நிகரானவையாகவே அரசும் அதிகார வர்க்கமும் விளங்குகின்றன போன்ற வெபரின் கருத்துக்களை கொண்டு லூக்காச் முதலாளித்துவத்திற்க்கு எதிரான தன் விமர்சன பார்வையை முன்வைத்தார்.

வரலாறும் வர்க்க உணர்வும் என்ற நூலின் மூலம் லூக்காச்சின் நெறிபிறழா மார்க்சியம் தொடர்பான விமர்சனப் பார்வை வெளிப்படுத்தப்படுகின்றது. நெறிபிறழா மார்க்சியம் என்றால் என்ன? என்ற கேள்வியை இவ் நூலில் முன்வைக்கின்றார். நெறிபிறழா மார்க்சியம் என்பது மார்க்ஸின் ஆய்வுகளை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதோ, அவரின் ஆய்வில் முழுமையாக நம்பிக்கை வைப்பதோ அல்லது ஒரு வேத நூலுக்கு அழிக்கப்படும் விளக்கமோ அல்ல என்றார். அது மார்க்ஸியத்தை வேறுபடுத்திக்காட்டும் ஒர் முறையியல் என்றார். மார்க்ஸியத்தின் ஏனைய முறையியல்கள் நிராகரிக்கப்பட்டாலும் இவ் முறையியலினால் மார்க்ஸியம் செல்லுபடியாகதாக மாறும் என்றார்.

இவ் நெறிபிறழா மார்க்சியம் அதன் உருவாக்கினரின் வழியில் விரிவாக்கப்படலாம், அபிவிருத்தி செய்யப்படலாம், ஆழப்படுத்தப்படலாம் என்றார். இதனை மார்க்ஸியம் எவ் யதார்த்ததிற்க்கு உட்பட்டு அபிவிருத்தி அடைகின்றதோ அச் சமூக யதார்த்தத்தின் தாக்கத்திற்க்கு அது உட்பட்டே தீரும் என்று மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸின் படைப்புக்கள் ஒரே தன்மை கொண்டதாக இருக்காமல் லெனின், ப்ளகானோவ், காட்ஸ்கி, ரோஸா லுக்ஸம்பர்க, பெர்ஸ்டின் ஆகிய அறிஞர்களிடேயே மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் வேறுபட்டு காணப்படுகின்றமையினை 1920 இல் லூக்காச் தெளிவுபடுத்தியமையின் மூலம் அறியலாம். இங்கு இவ் அறிஞர்களிடையே மார்க்ஸின் கருத்து அபிவிருத்தி அடைந்தும் மேலும் ஆழமாக்கப்பட்டதையம் நாம் அறியலாம்.

இவ்வாறு விமர்சனவியல் கோட்பாட்டில் பல்வேறு பங்களிப்புகளை மேற்கொண்ட லூக்காச் எங்கல்ஸ் கூறும் இயற்க்கையின் இயங்கியல் எனும் கோட்பாடினையும் விமர்சன பார்வை கொண்டு நோக்கினார். ஏங்கல்ஸ் தன் கோட்பாட்டில் 'சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் ஈறாக, சிறு மனல்துகள் முதலாக சூரியன் ஈறாக, உயிரனு முதல் மனிதன் வரை, இயற்க்கையில் உள்ள எல்லாப் பொருட்களும் இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கின்றது. இடையிறாது இயங்கிவரும் நிலையிலும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையிலும் உள்ளது.' என்கின்றார்.

இயற்க்கை என்பது இடையறாது இயங்கிக்கொண்டிருக்கின்றது, மாறிக்கொண்டிருக்கின்றது. இடையறாது தன்னைதானே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது. இயற்க்கையில் எதாவது ஒன்று நொறுங்கி சிதைந்து கொண்டிருக்கின்றது என்றும் ஏதாவது ஒன்று புதிதாக பிறந்து கொண்டும் இருக்கின்றது எனவும், இயற்க்கைப் பொருட்களும் அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடு ஒன்று இனைந்தும் சார்ந்தும் உள்ளன என இயங்கியல் கருதுகின்றது.  எனவே பல்வேறு தோற்றங்களை ஆராய்யும் போது அவற்றுக்கிடையில் நிலவும் பரஸ்பர தொடர்புகள் மற்றும் பரஸ்பர சார்பு நிலைகளை ஆராய்ய வேண்டும் எனக்கருதினார் ஏங்கல்ஸ்.

ஏங்கல்ஸின் இவ் இயற்க்கை இயங்கியல் கோட்பாட்டினை லூக்காச் விமர்சித்தார். இயங்கியல் முறைமையின் நோக்கமும் மையப்பிரச்சினையும் மெய்யுலகை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதுதானேயன்றி மெய்யுலகு எவ்வாறு இயங்கியல் ரீதியாக மாற்றமடைகின்றது என்பதை புரிந்துகொள்வதல்ல என்று விமர்சித்தார். 'இயங்கியல் என்பது பரஸ்பர வினையே அன்றிக் கறாரான ஒரு காரணம் ஒரு விளைவு என்ற விடயம் அல்ல' என்ற ஏங்கல்ஸின் கருத்தை சுட்டிக்காட்டி மிக மிக முக்கியமான வரலாற்றியக்கத்தில் மானுடருக்கும் புறவுலகுக்ககுமிடையில் நிலவும் பரஸ்பரவினையைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடவில்லை என லூக்காஸ் விமர்சித்தார்.

இவ் விமர்சனத்தின் அடிப்படையில்தான் லூக்காச் சமூக முழுமை எனும் கருத்தாக்கத்தை பிராதனப்படுத்தினார். இவர் சமூக முழுமை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அவ் தொடர்புகள் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதான உறுப்புகளை கொண்ட தொகுப்பு எனக்கருதுகின்றார். இவ் சமூக முழுமை இயங்கியலை புரிந்து கொள்வதற்க்கு இன்றியமையாத கருத்தாக்கம் என கருதினார். இதன் வழி அவரது காலத்தில் நிலவிய மாக்சிய இயங்கியல் விளக்கங்களை விமர்சித்தார். உற்பத்தி சத்திகள், உற்பத்தி உறவுகளின் வடிவத்தை தீர்மாணிக்கின்றன, இதன் விளைவால் ஏற்படும் வர்க்கபிரிவினைகள் அரசியல் சித்தாந்தத்தை தீர்மாணிக்கின்றன போன்ற ஒரு அம்சம் மற்றைய அம்சத்திற்க்கு காரணமாக அமைகின்றது எனும் குறுக்கல் பார்வையை விமர்சித்து, உயிருள்ள உறுப்புகளை போல ஒன்றுடன் ஒன்று பரஸ்பர இயங்கியல் தொடர்பினை கொண்ட முழுமையான சமூக அமைப்பாகவே சமூதாயத்தை பார்க்க வேண்டும் என்றும் இதுவே மார்க்ஸின் பார்வையும் என்று லூக்காச் வாதிட்டார். இவ்வாறு பாரபட்சமின்றி மாக்சிய சிந்தனைகள் பற்றியும் தன் விமர்சனங்களை முன்வைத்து விமர்சனவியல் கோட்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
அடுத்து விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் லூக்காச் ஆற்றிய முக்கிய பங்களிப்பாக மார்க்ஸின் பொருளாதிக்கம், சரக்கு வழிபாடு, அந்நியமாதல் போன்ற கருத்தாக்கங்களினை முக்கியத்துவப்டுத்தியமையினை கூறலாம். 

லூக்காச்சிற்க்கு முன்னரே மார்க்ஸ் தன் 'மூலதனம்' எனும் நூலில் இவ் கருத்தாக்கங்கள் பற்றி கூறியிலுந்தாலும் அதன் கையெழுத்துப் படிகள் வரும் முன்னே லூக்காச் தன் 'வரலாறும் வர்க்க உணர்வும்' எனும் ஆக்கத்தில் மார்க்ஸின் இவ் சிந்தனைகளை முக்கியத்துவப்படுத்தினார். இதன் பின்னரே மாக்சிய சிந்தனையின் இவ் சிந்தனைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் வழியே இவை விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் உதவின.
லூக்காச் மாக்ஸியத்தின் சிந்தனைகளினை கொண்டு முதலாளித்துவத்தின் உற்பத்தி முறை, தொழிற்பிரிப்பு எனும் பல வடிவங்களை விமர்சிப்பதன் மூலம் விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றார். லூக்காச் முதலாளித்துவ உற்பத்தி செயற்பாட்டின் வழியில் தொழிலாளி அந்நியமாதலுக்கு உட்படுகின்றான் என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றார். முதலாளித்துவம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய அதன் உற்பத்தி முறையினுள்ளே தொழிற்பிரிப்பும் வளர்ச்சியடைந்து செல்லும், நவீன தொழிற்சாலைகளில் ஒரு பண்டத்தினை முழுமையாக ஒரு தொழிலாளி உற்பத்தி செய்வதில்லை அவ் பண்டத்தின் ஒரு பகுதியினையே உற்பத்தி செய்கின்றான். இதன் வழி முழு உற்பத்தி இயக்கத்தையும் பார்க்க முடியாத தொழிலாளி அவனது உழைப்பில் இருந்து அந்நியமாகின்றான் என்றார்.


அந்நியமாதல் தோன்றுவதற்க்கு பிரதான காரணமாக மார்க்ஸ் கூறும் சரக்கு வழிபாடு என்பது காணப்படுவதாக கூறுகின்றார். முதலில் மார்க்ஸ் எதனை சரக்கு என்று கருதுகின்றார் என்பதை அறிதல் வேண்டும். சரக்கு என்பது முதலாவதாக எமக்கு புறத்தேயுள்ள பொருள், தனது குணங்களை கொண்டு எதேனும் மனித தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. இத் தேவைகளின் தன்மை எப்படிபட்டதாய் இருந்தாலும் சரி.  சமூகத்தால்  சமூகத்திற்க்காக உற்பத்தி செய்யப்படும் இவ் பரிவர்த்தனை பொருட்க்கள் தனிமனிதர்களினாலேயே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் பொருட்கள் செல்வம்மாக சமூகத்தில் எண்ணற்ற சரக்கு குவியலாக தோற்றமளிக்கின்றது. இதன் வழியில் ஒரு பொருளிள் பயன்மதிப்பு அதன் பரிவர்தனை மதிப்பிற்க்கு பின்னால் மறைக்கபடுவதாக தன் விமர்சனத்தை முன்வைக்கின்றார் லூக்காச்.

ஒரு பொருளின் பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என்பதை பற்றி மார்க்ஸ் பின்வருமாறு தனது 'பணமும் சரக்கும்' எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ஒரு பொருளின் பயன்மதிப்பு என்பது அவ் பொருளின் உள்ளார்ந்த தன்மை எனலாம், அவ் பொருள் நுகரப்படுவதால் பயன்மதிப்பு உருவாக்கப்படுகின்றது. அதே பொருள் சந்தைக்கு செல்லும் போது அங்கு அதற்க்கான பரிவர்த்தனை மதிப்பு தீர்மாணிக்கப்படுகின்றது. பயன்மதிப்பில் இருந்து எவ்வாறு பரிவர்த்தனை மதிப்பு தோன்றுகின்றது. பரிவர்த்தனை மதிப்பு கண்னுக்கு புலப்படாத ஒன்றின் மூலம் தீர்மாணிக்கப்படுகின்றது. எல்லா சரக்கிற்க்கும் பயன்மதிப்பு காணப்பட்டாலும் அவ் மதிப்பு பொருளுக்கு பொருள் வேறுபாடு கொண்டவை. பரிவர்த்தனையில் அரிசியினையும் இரும்பையும் சமப்படுத்துவது எது, ஒரு பொருளின் பயன்மதிப்பை விலக்கிப் பாரத்தால் பரிவர்தனையில் வெளிப்படும் பொதுவான அம்சமான உழைப்புதான் பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிப்பதாக அமைகின்றது. எனவே உழைப்பின் அடிப்படையிலேயே பரிவர்த்தனை மதிப்பு தீர்மாணிக்கப்படுகின்றது.

இவ்வாறு பரிவர்த்தனை மதிப்பு மனிதனின் உழைப்பின் படி தீர்மாணிக்கபடுவதை லுர்க்காச் விமர்சிக்கின்றார். இவ்வாறு உழைப்பின் அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பு கணக்கிடப்படுவதால் உற்பத்தியாளன் தமக்கிடையே கொண்டுள்ள உறவு சரக்குகளிடையேயான சமூக உறவு போல் தோற்றமளிக்கின்றது என்கின்றார். மேலும் இவ்வாறு பரிவர்த்தனை மதிப்பில் எல்லாம் கணக்கிலெடுக்கபடுகின்றன மனித உழைப்பும் இங்கு கணக்கிடப்படுகின்றது. அவனது உழைப்பும் உற்பத்தி திறனும் கணக்கெடுக்கப்படுகின்றது, அவனது உழைப்பின் இயக்கமும் கூட நுட்பமாக கூறு கூறாக்கப்படுகின்றது. தொழிலாளியின் ஆளுமையினை கருத்தில் கொள்ளாது குறிப்பிட்ட வேலையினை மட்டும் செய்யும் இயந்திரம் போல் அவனை கருத்தில் கொள்வதினை லூக்காஸ் கடுமையாக விமர்சித்தார். 
இதன் வழி முதலாளித்துவத்தின் மற்றுமொரு அம்சமான பொருளாதிக்கத்தினையும் லூக்காச் விமர்சனம் செய்கின்றார். பொருளாதிக்கம் என்பது எல்லா விடயங்கனும் பொருட்களுடன் தொடர்புபடுத்தி நோக்குதல் ஆகும். எடுத்துக்காட்டிற்க்கு உழைப்பினை கூட ஒரு சரக்காக கணக்கிடலை கூறலாம். இவ் பொருளாதிக்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சமூக வாழ்க்கை முழுவதிலும் பரவியுள்ளதாக லூக்காஸ் கூறுகின்றார். இவ் பொருளாதிக்கம் உழைப்பு, சட்டம் என்பனவற்றை அருவமாக்கின்றது என லூக்காஸ் விமர்சிக்கின்றார். உற்பத்தி செயற்பாட்டில் உழைப்பை துண்டு துண்டாக இது பிரிக்கின்றது பின் அனைவருக்கும் பொதுவான சட்டம் என சட்டங்களை அருவமாக்கின்றது. இதனால் சமூக உறவுகள் இங்கு சட்ட உறவுகளாக காட்சியளிக்கின்றன.
இவ் பொருளாதிக்கம் உழைப்பினை போன்று சிந்தனைகளினையும் துண்டு துண்டாக பிரிக்கின்றது இதன் விளைவாக ஒரு முழுமையில் இருந்து பிரியும் அறிவு துறைகள் தாமே ஒரு தனி முழுமை துறைகளாக மாற்றம் பெறுகின்றன என தன் பொருளாதிக்கம் மீதான விமர்சனத்தை முன்வைக்கின்றார். 

இதனால் இவ் தனித்துறைகள் எந்த அடிப்படையில் தோன்றியதோ அதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்ப்படுகின்றது. இதற்க்கு எடுத்துகாட்டாக நேர்காட்சிவாதம் மற்றும் அனுபவவாதம் என்பனவற்றை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றார். இவ் கோட்பாடுகள் விவரங்களை அதன் ஒட்டு மொத்த சூழலில் இருந்து பிரிக்கின்றன என்பது லூக்காச்சின் விமர்சனமாகும்.
நேர்காட்சிவாதம் சமூகத்தில் புறவயமான தர்க்க ரீதியாக நிறுபிக்கக் கூடிய அறிவியல் பூர்வமான விடயங்களை மட்டுமே தன் ஆய்விற்க்கு உட்படுத்துகின்றது. இங்கு சமூகத்தின் கலாசார நெறிகள், சமூக மதிப்புக்கள், சின்னங்கள் என்பன ஆய்விற்க்கு உட்படுத்தபடுவதில்லை எனவே இதன் வழி லூக்காச்சின் விமர்சனத்தை பரிந்துகொள்ளலாம். இவ்வாறு லூக்காச் முழுமையில் இருந்து தனியாக்கப்பட்ட பல கோட்பாடுகளை விமர்சன பார்வையுடன் நோக்கி விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றினார்.

விமர்சனவியல் கோட்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்று மாக்சியம் உட்பட அனைத்து கோட்பாடுகளுக்கும் சுயாதீனமாக இருப்பதாகும். இதன் படி மாக்ஸிய சிந்தனையின் தாக்கத்திற்க்கு உட்பட்டிருந்தாலும் மார்க்ஸின் கருத்துகளையும் விமர்சித்து விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கினார். மார்க்ஸ் கூறிய வர்க்க உணர்வு பற்றிய விமர்சனங்களை லூக்காச் கொண்டிருந்தார். மாக்சிய கோட்பாட்டின் படி வர்க்க உணர்வு என்பது தமது பொருளாதார அல்லது தமது வர்க்கம் பற்றிய விழிப்புனர்வாகும். எனினும் இவ் வர்க்க உணர்வு எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சியடைகின்றது என்பதையும் அதன் வளர்ச்சியை தடுப்பது எது என்பது பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடவில்லை என்பது லூக்காச்சின் விமர்சனமாக காணப்படுகின்றது. 

வர்க்க உணர்வு பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் விட்ட இடத்தில் இருந்து லூக்காச் தொடங்குகின்றார். வர்க்க உணர்வு என்பதை லூக்காச் இரண்டு வகையாக நோக்குகின்றார். ஒரு வர்க்கம் சமூதாயத்தில் தனக்குள்ள நிலை பற்றி தானே பெறும் உணர்வை உடனடி உணர்வு என்றும் தனது நலன் பற்றி புரிந்து கொண்டு அதற்க்காக போராடகச் கற்றுக்கொள்ளும் போது பெறும் உணர்வு ஊட்டப்பட்ட உணர்வு என்றும் கூறுகின்றார் லூக்காச். இவ் உணர்வை பாட்டாளிவர்க்கத்திற்க்கு கொடுப்பது கட்சியென்றும் இவ் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் மனசாட்சியாக இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.
இவ்வாறு எல்லாக் கோட்பாட்டுகளுக்கும் சுயாதீனமாக நின்றும் ஆதிக்க சத்திகளையும் அதிகார வர்க்கத்தையும் விமர்சனத்திற்க்கு உள்ளாக்கி மக்களின் போலி அறிவை நீக்கும் விதத்தில் விமர்சன கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார் லூக்காச். இவருடைய பணிகளின் அடிப்படையில் பின் வந்த விமர்சனவியல் கோட்பாட்டாளர்களாகிய ஹோர்க்ஹமர் மற்றும் அதோரனோ போன்ற அறிஞர்கள் தம் விமர்சன அறிவை வளர்த்துக்கொண்டு விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்றினர் எனலாம். 





Thursday, July 21, 2022

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஆய்வாளராக நீர் கவனத்தில் எடுத்து கருதுகோள் உருவாவதற்;கான வழிமுறைகள், உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் என்பனவற்றை குறிப்பிட்டு விளக்குக.

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஆய்வாளராக நீர் கவனத்தில் எடுத்து கருதுகோள் உருவாவதற்;கான வழிமுறைகள், உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் என்பனவற்றை குறிப்பிட்டு விளக்குக.

பொதுவாக ஆய்வேன்பது அறிவுக்கான தேடல் எனப்படுகின்றது. மனிதனது மனமானது ஒரு ஆலோசனைக் கூடமாகும். ஏந்தவொரு பொருளையோ, ஆலோசனையோ, அல்லது புதிய உத்திகளையோ கண்ட உடன் அல்லது கேட்ட உடன் அவனது மனதில் தோன்றும் ஏன், எவ்வாறு, எப்படி என்ற கோள்விகளின் அடிப்படையில் ஆய்வானது கட்டமைக்கப்படுகின்றது. ஆய்வு என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கனங்களில் ஆட்வான்ஸ்ட லேனர்ஸ் அகராதியின் வரைவிலக்கனம் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தவகையில் 'ஆய்வு என்பது ஒர் மிகக் கவனமான விசாரனையாகும் இவ் விசாரனை எந்தவொரு புதிய அறிவுப் பாதையிலும் இருக்கலாம்' என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஆய்வினை முன்னெடுத்து செல்லவும் வழிநடத்தவும் ஆய்வாளருக்கு உதவும் ஒன்றாக கருதுகோள் காணப்படுகின்றது. அடுத்து நாம் கருதுகோள் என்றால் என்ன என்பதினை பற்றி நோக்குவோம்.

ஆய்வின் சிக்கலை தீர்ப்பதற்க்கு ஆய்வாளனால் முதலில் உருவாக்கிக் கொள்ளும் விளக்கம் அல்லது தீர்வு என்பதே கருதுகோள் என கூறுவர். இவ்வாறு ஆய்வாளனினால் உருவாக்கிக் கொள்ளும் தற்க்காலிக விளக்கங்கள் அல்லது தீர்வுகள் ஆய்வின் சிக்கலுக்கு தீர்வாக அமையலாம் அல்லது அவ் கருதுகோளின் அடிப்படையில் மேலும் தொடர்ச்சியாக நுணுகி ஆராய்யும் போது ஆய்வின் முடிவு மெய்யான தீர்வுகளுக்கும் இட்டுச்செல்லலாம். ஆய்வாளன் அறிவியல் நெறிப்படி ஆய்வை மேற்க்கொள்கையில் மெய்களை திரட்ட முற்ப்படுகின்றான். ஆய்வில் தரவுகளை திரட்டுவது ஆய்வாளனின் முதற்பணியாக அமைகின்றது. தரவுகளையோ அதன் வழி மெய்களையோ எவ்வித குறிக்கோளுமின்றி திரட்ட முற்ப்படின் அந்த ஆய்வில் எவ்வித பயனும் கிடைக்கமாட்டாது. மெய்களை திரட்ட வேண்டும் என்பதற்க்காக யாரும் மெய்களை திரட்டுவதில்லை. ஏதேனும் ஒரு நோக்கினை அல்லது முன்மொழி உரையினை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ மெய்மைகளை ஆய்வாளன் தொகுக்கின்றான். அத்தகைய ஒரு நோக்கு அல்லது முன்மொழிவுரைதான் கருதுகோள் ஆகும்.

தெரிந்தும் கிடைக்க கூடிய தரவுகளை மேலோட்டமாக உற்று நோக்கி உருவாக்கிய தற்காலிகமான தீர்வைக் கருதுகோள் என்று விளக்குவர். இவ்வாறு அறிந்தவற்றைக் கொண்டு உருவாக்கிய தற்காலிகமான நோக்கின் அடிப்படையில் ஏனைய தரவுகளை திரட்டவும், அவற்றை உற்று நோக்கி ஆராய்யவும் ஆய்வாளர் முற்ப்படுவர். ஆய்விற்க்கான தற்காலிக தீர்வான கருதுகோள் ஆய்வு பயணத்தின் போது மாற்றம் பெறவும் கூடும். கருதுகோள் என்பதே ஒரு ஊகம் என்று அறிஞர்கள் விளக்குவர். கருதுகோள் எனும் சொல்லை ஒரு முன்மொழிவுரை ஊகமாக கொள்ளப்பட்ட ஒரு கொள்கை அல்லது நிபந்தனை என்று விளக்குவர். இவ்வடிப்படையில் நோக்குவோமானால் நம்பிக்கையில்லாவிடினும் ஊகமாகக் கொள்ளப்பட்ட இத்தகு கொள்கையினைக் கொண்டு தெரிந்த அல்லது தொகுக்கின்ற மெய்களிடையில் உள்ள காரண காரியத் தொடர்பை கண்டறிய கருதுகோள் பயன்படுகின்றது. எனவே ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆய்வின் சிக்கலுக்கு தற்காலினமாக விளக்கம் அல்லது தீர்வு எனும் கருதுகோளை உருவாக்காமல் ஆய்விற் முன்னெறிச் செல்ல முடியாது.  

கருதுகோளின்றி ஆய்வை தொடர்வது என்பது கண்னைக் கட்டிக் கொண்டு நடப்பது போல் ஆகிவிடும். ஆய்வாளன் தான் தெரிவு செய்த சிக்கலை விளக்குவதற்க்கு ஏற்ற வகையில் ஆய்வினை மேற்க்கொள்ள முடியாமல் போகும். கள ஆய்வில் நின்று தரவுகளை சேகரித்தது பயனின்றி போகும். காலமும், பொருளும், ஆற்றலும் வீணாகும். தரவுகளில் ஏவற்றை திரட்டுவது, எவற்றை தவிர்ப்பது, திரட்டிய தரவுகளை எவ்வாறு வகைப்படுத்துவது. தரவுகளிற்க்கு இடையிலான தொடர்பை எவ்வாறு அறிவது போன்ற பல சிக்கல்கள் கருதுகோளின்றி ஆய்வினை மேற்க்கொள்ள முற்ப்படும் போது தோன்றும். 

ஆய்விற்க்குரிய சிக்கலுக்கு எற்ப்பத் தரவுகளை தொகுப்பதற்க்கும், மிகத் திறமையுடன் எவ்வாறு அவற்றை வகுத்து அமைப்பதும் என்று அறியவும் கருதுகோள் ஆய்வில் பயன்படுகின்றது. மேலும் ஆய்வின் தேடலுக்கும் கருதுகோள் உதவுகின்றது. ஆய்வுப் பொருளில் ஆய்வாளனுக்குரிய பட்டறிவின் துனையுடன் உருவாக்கப்பட்ட கருதுகோள் நல்ல முறையில் ஆய்வை மேற்க்கொள்ள உதவுகின்றது. கருதுகொளின் துனையின்றி தரவுகளை திரட்ட முற்ப்படும் ஆய்வாளர் நல்ல தரவுகரள விடுத்து தேவையில்லாதவற்றை திரட்ட முற்ப்படலாம். ஆய்வின் இன்றியமையாத தரவுகளை திரட்ட ஆய்வாளனுக்கு கருதுகோள் உதவுகின்றது. 

அடுத்து நாம் கருதுகோளின் உருவாக்கத்தில் கவணிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக நோக்குவோம். ஆய்வாளனின் ஆழ்ந்த புலமையும் தோய்ந்த அறிவும் மட்டுமே கருதுகோள்களை உருவாக்கும் வாயில்கள் ஆக அமைவதில்லை. அவற்றுடன் கூட ஆய்வாளனின் அனுபவங்கள், நாட்டு மக்கள் பற்றிய பட்டறிவு, பிற அறிவியல் துறைகளில் பெற்ற ஒப்புவமையாக்கம், மாறுபட்ட நிகழ்வுகளை உற்று நோக்கும் தன்மை, புனைதிறன், ஊள்ளுனர்வு என்பனவும் ஆய்வில் கருதுகோள்ளின் உருவாக்கத்திற்க்கு பங்களிக்கின்றன. ஆய்வாளனின் ஆனுபவங்களே பொருத்தமான கருதுகோள்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என பல சான்றுகள் கூறுகின்றன.

கருதுகோள் ஒன்று உருவாக்கப்படும் போது அவை செயலறிவால் உணர்ந்து கொள்ளப்படுமாறும் சோதனைக்கேற்றவாறும் கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். களத்தில் உற்று நோக்கி அறிவதன் மூலம் சோதித்து அறியுமாறு அமையக்கூடிய வண்ணம் சில ஊகங்களை உடையதாக கருதுகோள் அமையவேண்டும். உற்றுநோக்கக் கூடியவற்றுக்கு தொடர்புடையவையாக கருதுகோள் காணப்பட வேண்டும். இத் தன்மையிலிருந்து கருதுகோள் தவறின் சோதனைகளுக்குரிய மெய்மைகளுடன் உற்று நோக்கக் கூடிய மெய்மைகள் கொண்டுள்ள தொடர்பை கண்டறிந்து ஆய்வினை முன்னொக்கி கொண்டு செல்லுதல் சிரமமானதாகிவிடும்.

கொள்கையளவில் தெளிவானதாக கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். கருதுகோளில் கூறப்படும் கொள்கைகளில் குழப்பம் எதுமின்றித் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். கருதுகோள் உருவாக்கத்தில் மட்டுமின்றி அதன் செயற்ப்பாட்டிலும் தெளிவு காணப்பட வேண்டும். சரியாக வரையறுக்கப்படாத கொள்கைகளை கொண்ட பொருள் மயக்கம் தரவல்ல கருதுகோள்களை சோதித்து பார்க்க முடியாது. பொதுவாக ஏற்றுக்கொள்ள தக்கனவாகவும் அனைவருக்கும் விளங்கக்க கூடியனவாகவும் கருதுகோள்கள் அமையும் போதே அதனை சோதித்து பார்க்க முடியும். இதேபோல் கருதுகோள் திட்டவட்டமபனதாகவும் தெளிவான சொற்தொடர்களை கொண்டதாகவும் அமையப்பெறல் அவசியமாகும். 

கோட்பாடுகளின் அமைப்பிற்க்கு தொடர்புடையதாகக் கருதுகோள்கள் அமைதல் வேண்டும். கருதுகோள்கள் கோட்பாட்டிற்க்கு தொடர்புடையதாக அமையும் போதே ஆய்வுகள் கோட்பாடுகளை தரமிக்கதாக மாற்றுவதாகவும், துனை செய்வதாகவும், அல்லது அவற்றை மறுப்பதாகவும் அமையப் பெறும். 'நமக்கு தெரிந்தவற்றை மட்டும் எடுத்து செல்வதாக அமையாமல் எமக்கு தெரிய வேண்டியது என்ன என்று சொல்வதாகவும் கோட்பாடுகள் அமையப் பெறுகின்றன' என்ற பார்ஸனின் கருத்திற்க்கமைய கருதுகோள்கள் புதிய கோட்பாடுகளை உருவாக்குவதற்க்கும் இருக்கும் பழைய கோட்பாடுகளை திருத்தி வடிவமைக்கவும் கூடியனவாக அமைதல் வேண்டும். 

மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக ஒரு கருதுகோளானது தெளிவாகவும் ஒரு இலக்கிடை கொண்டதாகவும் அமைதல் வேண்டும். கருதுகோள் புதிய கொள்கைகளை விளக்குவதாக அமையும் போது முன்னொரின் வழியில் மரபிற்க்கு ஏற்ப மதிப்பளித்திடும் பாங்கை பின்பற்ற வேண்டும். தெரிந்த உத்திகளை கொண்டு சோதித்து பார்க்கும் வகையில் கருதுகோள்கள் அமைதல் வேண்டும். மேலும் சுருக்கமாகவும் செறிவாகவும் கருதுகோள் அமைதல் வேண்டும். இவ்வாறு ஒரு கருதுகோளினை உருவாக்கும் போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் போது அது நல்ல கருதுகோளாகவும் ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உதவுபவையாகவும் காணப்படும்.

அடுத்து கருதுகோள்களினை உருவாக்கும் வழிமுறைகளினை பற்றி நோக்குவோம். கருதுகோள் உருவாக்கத்தின் போது பின்வரும் கேள்விகளை ஆய்வாளன் தனக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டும் என்கின்றார் ராபர்ட் பேல்ஸ் எனும் அறிஞர். அவ்வாறு அவர் முன்வைக்கும் கேள்விகளாக பின்வருவன காணப்படுகின்றன.

1. கருதுகோள் செயல் முறைக்கு உட்படுது;தப்படுமாறு திட்டவட்டமான சொற்களை உடையதாக உள்ளதா தெளிவான சூழ்நிலைகளில் கொள்கைளில் மாற்றங்களை இனங்காண கூடியதாக உள்ளனவா?

2. செயல்முறைச் சோதனைகளால் நிறுவப்பட கூடியதாகவும் மறுக்கபடக் கூடியதாகவும் கருதுகோள் உருவாக்கப்பட்டுள்ளதா?

3. மேற்கொண்ட கருதுகோளுக்கு ஆதாரமாகவோ அல்லது எதிராவோ உறவுடையதாக முந்தைய கருத்து சான்று ஏதும் உள்ளதா?

4. கருதுகோளினை அடிப்படையாக கொண்டு ஒரு முறையான ஆய்வு திட்டத்தை வகுக்க முடியுமா?

5. கருதுகோள் மாறும் சூழநிலைகளுக்கு உட்பட்டதா?

6. குறித்த பண்பாட்டு சூழலுக்கு ஏற்றவாறு கருதுகோள் அமைந்துள்ளதா?

7. கருதுகோள் பிற பண்பாட்டு சூழல்களுடன் இயந்து வருமா?

8. ஆய்வின் போது காலப்போக்கில் ஏற்ப்படும் மாற்றங்களுக்கு கருதுகோள் பொருத்தமானதாக அமையுமா?

9. கருதுகோள் திட்டமிடப்பட்ட சோதனைகளால் நிறுவப்பட்ட கோட்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியா? அல்லது பொதுமைப்படுத்தப்பட்டதா?

10. சோதனை முறைக்கு உட்படும் வகையில் சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதா? வலுவான சூழ்நிலைகளை முன் கூட்டியே ஊகித்து கூறும் வன்னம் கருதுகோள் உருவாக்ககப்பட்டுள்ளதா?

இவ் கேள்விகளை ஆய்வாளர் தமக்குள் கேட்டுக் கொள்வதன் மூலம் ஆய்விற்க்னான சிறந்த கருதுகோளினை உருவாக்க முடியும் என்று கூறுகின்றார்.

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு கருதுகோள் உருவாக்கத்தில் பின்பற்றப்படும் படிகளாக பின்வருவன காணப்படுகின்றன.

ஏதோவொன்றைப் பற்றிய பல கருத்துக்களை சேகரிப்பதன் மூலம் கருதுகோள் உருவாக்கம் தொடங்குகின்றது

கருதுகோள் உருவாக்கத்தில் அடுத்து அவதானிப்புக்கனை மதிப்பிடுவதோடு, பிரச்சினைக்கு சாதகமான காரணங்கள் இருப்பதையும் அறிதல் வேண்டும்

நீங்கள் ஆராய விரும்பும் சாத்தியமான விளக்கங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும்

சில சாத்தியமான கருதுகோள்களை உருவாக்கிய பின் ஒவ்வொரு கருதுகோள்களையும் பரிசோதிப்பதன் மூலம் தேவையற்ற கருதுகோள்களை நீக்கி சிறந்த கருதுகோள்ளை உறுதிப்படுத்த முடியும்.

அடுத்து ஒரு கருதுகோள் உருவாகுவதற்க்கான நிபந்தனைகளினை நோக்குவோம். ஒரு ஆய்வினை முன்னெடுத்து செல்லும் கருதுகோளினை உருவாக்க பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. 

ஆய்வாளர் தான் தெரிவு செய்த ஆய்வு விடயம் தொடர்பான பின்னனி பற்றிய போதிய அறிவை பெற்றிருக்க வேண்டும். ஆய்வு பிரச்சினையின் போக்கு, அதன் விளைவு, மாறும் உறவுகளின் தன்மை போன்றவற்றை அவதானித்து ஆய்வு விடயம தொடர்பாள செழுமையான அறிவினை பெற்ற பின்னே கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். உதாரணமாக ஒரு வகுப்பாசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவர்களை எவ்வாறு அவதானித்து அந்த வகுப்பு தொடர்பான புரிதலை ஏற்ப்படுத்தி கொள்கின்றாரோ அவ்வாறே ஆய்வாளரும் தன் ஆய்வு விடயம் தொடர்பான புரிதலை அடைந்த பின் கருதுகோளினை உருவாக்க முடியும்.

ஆய்வாளர் பல்துறை பற்றிய அறிவை பெற்றிருத்தல் வேண்டும். அதாவது ஆய்வாளர் பல்துறைகளi பற்றி அறிந்து அதில் இருந்து தனக்கு பிடித்த துறையில் ஆய்வினை மேற்க்கொள்கின்றார். அவ்வாறு அவர் விரும்பிய துறை சார் கோட்பாடுகளில் இருந்து தோன்றியதாக கருதுகோள் காணப்படவேண்டும் பின் அவ் கருதுகோள் மூலம் முன்னெடுக்கப்படும் ஆய்வால் புதிய கோட்பாடுகள் அல்லது கருதுகோள் உருவாக்கிய கோட்பாடுகளில் மாற்றம் ஏற்ப்படலாம்

ஆய்வாளர் சூழ்நிலைகளுடனான ஒப்பிட்டு பார்க்கும் தன்மையை பெற்றிருத்தல். அதாவது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிகளுக்கிடையிலான தன்மைகளை அறிதல் மற்றும் வேறுபடும் சூழல்களுக்கும் காரணிகளுக்கும் ஏற்ப்ப கருதுகோள்களை உருவாக்கவும் இது உதவும்.

ஆய்வாளர் கலந்துரையாடல் மேற்க்கொள்ளவும் மற்றும் ஆலோசiனைகளை கேட்க்கும் தன்மை கொண்டவர்ராக காணப்பட வேண்டும். சக ஊழியர்களுடனான உரையாடல், மற்றும் அறிஞர்களின் ஆலோசனை என்பன சிறந்த கருதுகோளினை உருவாக்க உதவ கூடியவையாக அமைகின்றன.

அடுத்து நாம் கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நோக்குவோம். கருதுகோள் என்பது ஆய்வினை வழிநடத்த ஆய்வாளருக்கு உதவுமொன்றாக காணப்படுகின்றது. ஒரு ஆய்வாளர் ஆய்விற்க்குரிய விடம் தொடர்பான போதிய அறிவை பெற்றிருக்காமையும், கோட்பாட்டு ரீதியான போதிய அறிவை கொண்டிருக்காமையும் கருதுகோள் உருவாக்கத்தில் எழும் பிரச்சினையாக அமைகின்றன. இவ்வாறு போதிய அறிவின்றி உருவாக்கப்படும் கருதுகோள் ஆய்வாளனின் நோக்கத்தில் இருந்து ஆய்வை வேறு திசைக்கு மாற்றி விடக்கூடும். மேலும் ஒரு ஆய்வு தொடர்பான கோட்பாட்டு ரீதியான ஆதாரங்கள் இன்மையும் கருதுகோள் உருவாக்கத்தில் சிக்கலை ஏற்ப்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.

ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வினை விட சமூக ஆய்விலேயே கருதுகோள் உருவாக்கத்தில் பல பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன. சமூக ஆய்வானது ஒரு பண்புரீதியான ஆய்வாக காணப்படுவதால் கருதுகோள் உருவாக்கத்தில் பல புறக்காரணிகளின் தாக்கம் ஏற்ப்பட கூடும். ஒரு ஆய்வாளன் பாரபட்டசமமின்றி கருதுகோள்ளை உருவாக்கும் போதே அவ் கருதுகோள் வழியான ஆய்வும் பாராபட்சமின்றி காணப்படும் எனினும் இங்கு ஆய்வாளனின் உணர்வுகள் மனவெழுச்சிகள் என்பன ஆய்வாளனின் கருதுகோள் உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.

மேலும் சமூகம் தொடர்பான ஆய்வினை மேற்க்கொள்ளும் மனிதன் எதோவொரு குழுவின் அங்கமாகவே காணப்படுவான் இதனால் அவன் தன் சமூகம் தொடர்பான கருதுகோளினை உருவாக்கும் போது நடுநிலையாக செயற்ப்பட முடியுமா என்பது கேள்விக்குரியதாக காணப்படுகின்றது. இதனால் கருதுகோள் ஒரு தலைபட்சமாக உருவாக்கபடுமாயின் அவ் ஆய்வினால் சிறந்த முடிவுகளை பெற்றுதர முடியாமல் போகும். இதனால் சமூகத்தின் அங்கத்தவரான மனிதன் அவ் சமூகம் தொடர்பான கருதுகோளை முன்வைத்தல் கருதுகோள் உருவாக்கத்தில் எழும் பிரச்சினையாக காணப்படுகின்றது.

தொகுத்து நோக்கும் போது ஒரு ஆய்வாளன் தன் ஆய்வினை முன்னெடுத்து செல்லும் பொருட்டு தன் ஊகத்தின் அடிப்படையி;ல் உருவாக்கி கொள்ளும் தீர்வே கருதுகோள் எனலாம். இவ் கருதுகோள் ஆய்வாளனினால் ஆய்விற்க்கு தேவையான தரவுகளை திரட்டவும் தேவையற்றவற்றை தவிர்க்கவும் உதவுகின்றது. அதேபோல் ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல ஆய்வாளர் கருதுகோளினை உருவாக்குதல் அவசியமாகின்றது. அவ்வாறு கருதுகோள் உருவாக்கபடாத பட்சத்தில் ஆய்வாளனின் நோக்கத்திற்க்கேற்ப ஆய்வு இடம்பெறாமல் போகலாம். எனினும் ஒர் ஆய்விற்க்கான கருதுகோளை உருவாக்குவதில் சில பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. சரியான கோட்பாட்டு ரீதியான பார்வை மற்றும் ஆய்வு விடயம் தொடர்பான தெளிவு என்பனவற்றின் மூலம் அவ் பிரச்சினைகளை தீர்க்கலாம்.